மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளோரின் விவரங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விவரங்களை வெளிப்படுத்துமாறு தகவல் அறியும் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு ஜூலை 2ஆம் திகதி அறிவுறுத்தியுள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான நிலையம், மலிந்த செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அந்தக் கட்டளைப் பிறப்பிக்கபட்டுள்ளது.
அதற்கமைய, எந்த சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது, வழக்கு எண், வழங்கப்படவுள்ள திகதி உள்ளிட்ட விவரங்களை வெளியிடுமாறு கட்டளை இடபட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரியொருவர், மரண தண்டனை கைதிகள் 20 பேரின் விவரங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அந்தத் தரவுகளை முழுமையாக வெளிப்படுத்த, தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ள கைதிகளின் அனுமதிப் பெறப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
எனவே இது குறித்த தீர்ப்பை வழங்கும் செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ள தகவல் அறியும் ஆணைக்குழு, மேற்குறிப்பட்டத் தகவல்களை மாத்திரம் வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.