திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி தினமான் இன்று (16) வழிபடச் சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு தவத்திரு அடிகளார் தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக கூறி, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை பொலிஸார் கையளித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன்போது, கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு சென்றவர்கள் மீது, இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலை 10 மணிக்கு ஏற்பட்ட பதற்றமான நிலைமை, 6 மணித்தியாலங்களின் பின்னர் மாலை 4 மணியளவில் வழமைக்குத் திரும்பியது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன


