இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் குறித்த கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால அந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு மறுத்துவிட்ட சூழ்நிலையில்,அலைனா டெப்லிட்ஸ் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
ஒப்பந்தத்தில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள அலைனா டெப்லிட்ஸ், இந்த ஒப்பந்தமானது வெளிப்படையானது என்றும், இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியது எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஊடாக, 480 மில்லியன் டொலரை அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாகவும், கடனாக வழங்கவில்லை எனவும் அலைனா டெப்லிட்ஸ், தனது அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.