விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர சபையின் நகரபிதா ஏராஜ் ரவிந்திர பெர்ணான்டோ மற்றும் அந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான பிரேமசிறி பரமான ஆகிய இருவருக்கும் 5 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு இன்று (02) தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில், மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று (02) வழங்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கண்காணிப்பதற்கா வருகைதந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரை, துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தினார்கள் என அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
எனினும், அந்த துப்பாக்கி, விளையாட்டுத் துப்பாக்கியென, நகர பிதா ஏராஜ் ரவிந்திர பெர்ணான்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஏழாவது பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டன. சந்தேகநபர்களுக்கு எதிராக 29 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கடூழிய சிறைத்தண்டனைக்கு அப்பால், ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஒருவரிடமிருந்து 1 இலட்சத்து 30ஆயிரம் ரூபாய் என்றடிப்படையில் இருவரிடமிருந்தும் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டது. அந்த தண்டப் பணத்தை செலுத்த தவறின், மேலுமொரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடாக, குற்றவாளிகள் இருவரும் தலா 6 இலட்சத்துக்கு 50ஆயிரம் ரூபாய் வீதம், 13 இலட்சம் ரூபாய், நட்டஈடாக வழங்கவேண்டுமென உத்தரவிட்ட நீதிமன்றம் அந்த பணத்தையும் செலுத்த தவறின், மேலுமொரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.