எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளரை களமிக்காமல் விடுவதற்கு தீர்மானித்துள்ளது என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
அதனையடுத்து, சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், கட்சியின் தலைமையகத்தில் விரிவான கலந்துரையாடல்களை நேற்று மேற்கொண்டிருந்தனர்.
அதேபோல,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணியை அமைக்கும் யாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
எனினும், சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடனும், மத்தியக் குழுவுடனும் விரிவான கலந்துரையாடல்கள் இன்னும் இரண்டொரு நாட்களில் இடம்பெறும் என்றும் அதற்குப் பின்னரே, இறுதித் தீர்மானம் எட்டப்படும் என, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.