web log free
September 20, 2024

ஷிரந்தியை களமிறக்க முஸ்தீபு

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கலந்துரையாடப்படுவதாக அறியமுடிகின்றது. 

கடந்த 11ஆம் திகதி, சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.

கோத்தாவுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமாயின், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நிறுத்துவதற்கே முன்னதாக கலந்துரையாடப்பட்டது.

எனினும், கோத்தாவே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாநாட்டில், ராஜபக்ஷ குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். 

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் பங்கேற்றிருந்தனர். அதில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தவிர, ஏனைய இருவரும் திருமணம் முடித்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், சமல்,பசில்,கோத்தா ஆகியோரின் பாரியார் எவருமே பங்கேற்கவில்லை.

அதேபோல, யோசித்த, ரோஹித ஆகியோரின் மனைவிகளும் பங்கேற்கவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ மட்டுமே பங்கேற்றிருந்தார்.

அதுவும் பிரதான மேடையிலேயே, அமர்ந்திருந்தார்.

ஆகையால், ஏதாவது சட்டசிக்கல் ஏற்பட்டு, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியாமல் போனால், மஹிந்தவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை நிறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 07 September 2019 12:41