web log free
November 27, 2024

லசந்தவின் மகள் ரணிலுக்கு கடிதம்

 படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த உருக்கமான கடிதம் சமூக வலைத்தளமான டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றது.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “என் தந்தை இறந்த நாளிலிருந்து, வாக்குகளை  பெறுவதற்காக நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி வருகின்றீர்கள்.

இதேவேளை ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.

மேலும் எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கொலைகளிற்காகவும் கோத்தாபய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என கேட்டிருந்தீர்கள்.

ஆனால் கோத்தாபய ராஜபக்ச, எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார்.

கடந்த பத்து வருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து மகிழ்ச்சியடைவதாக கோத்தாபய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

இதனூடாக அவர், ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

ஆனால் நீங்கள் கடந்த நான்கு வருடங்களாக கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை பாதுகாத்து வந்துள்ளீர்கள் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவீர்களா?

மேலும் எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என கூறி பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர வைத்தீர்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன.

2015ஆம் ஆண்டு அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன. நீதி என்பது லசந்தவுக்கு மாத்திரம் தொடர்புடையது இல்லையென தெரிவித்தீர்கள்.

நீங்கள் அவரை படுகொலையாளியென  கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோட்டாவின் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்.

ஆகையால் எனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்தவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன்” என அஹிம்சா தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd