இலங்கையின் வான்பரப்பில் நாளாந்தம் விமானங்களின் சேவைகள் இடம்பெறுவதனால், இலங்கைக்குள் இருக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை ஏற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என விமான நிலையத்தின் முகாமையாளர் எச்.எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
விமான நிலையங்களை அண்மித்த 5 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் இந்த தடை அமுல்படுத்தப்படும். அந்தத் தடையையும் மீறி பட்டங்களை ஏற்றினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையும் தண்டனை அமுல்படுத்தும் நடவடிக்கையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், ரத்மலானை, பலாலி, சீகிரிய,கொக்கல ஆகிய உள்ளூர் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளிலேயே முன்னெடுக்கப்படுமென அவர் அறிவித்துள்ளார்.
விமான நிலையங்களை அண்மித்த பிரதேசங்களிலிருந்து வானத்துக்கு ஏற்றப்படும் பட்டங்கள் மற்றும் அதற்கான நூல்களில், விமானங்களில் இயந்திரங்கள் உள்ளிட்ட இன்னும் பல பாகங்களில் சிக்கிக்கொள்ளக்கூடும். அவ்வாறு சிக்கிக்கொள்ளுமாயின் விமான விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.