மக்களின் பாதுகாப்புக்காகவே முப்படையினரும் செயற்பட்டு வருவதுடன், மக்களுக்கு இடையூறு விளைவிக்க அல்ல என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தெரிவித்தார்.
நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த நிலையில், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
மக்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி, பாதுகாப்பினை வழங்குவதற்கு முப்படையும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை சற்று அதிகமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என, சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் பாதுகாப்பு படையினரின் நோக்கம் என்றும் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்பு தொடர்பாக போதியளவு தெளிவுப்பெற்றுள்ள பாதுகாப்பு துறையினர் தமது கடமையை சரிவர நிறைவேற்ற இடமளிக்குமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கேட்டுக்கொண்டார்.