web log free
December 07, 2023

இரட்டைக் கொலை; வத்தளையில் ஐவர் கைது

கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யயப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை ஹுணுப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்ற நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் இருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டிருந்தன.

நேற்றைய தினம் இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பாதாள உலக குழு உறுப்பினர் ஆனமாலு ரங்க (39) மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.