web log free
December 02, 2023

மீண்டும் சந்திரிகா ஆதிக்கம்

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது தந்தையினால், நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கையாளப்படுவதாக தெரிவித்துள்ள சந்திரிகா, கட்சியைப் புதுப்பிக்கப் போவதாக கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குச் சென்று பல்வேறு உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, கட்சியின் தற்போதைய அவலநிலைக்கு, தனக்குப் பின்னர் கட்சியைப் பொறுப்பேற்ற தலைவர்களே காரணம் என்றும் விமர்சித்தார்.

கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குவதாக அறிவித்த சந்திரிகா குமாரதுங்க, தனக்கும் தனது பணியாளர்களுக்கும், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் உடனடியாக ஒரு தனி செயலகம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அவரது இந்தக் கோரிக்கை கட்சியின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, கட்சியின் பொதுச்செயலர் தயசிறி ஜெயசேகரவையும், சந்திரிகா குமாரதுங்கா குற்றம்சாட்டியுள்ளார்.