ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறான காய்நகர்த்தல்கள் பிரதான அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், சிறு கட்சிகள், அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது.
ஜே.வி.பி, அதன் வேட்பாளரை ஞாயிறுக்கிழமை (18) அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, தன்னுடைய வேட்பாளரை தெரிவு செய்வது இன்னும் காலதாமதமாகும் என அறியமுடிகின்றது.
அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தன்னுடைய வேட்பாளரை அறிவிப்பது தாமதமாகலாம் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளரை அறிவிக்கும் செயற்பாடுகளில் குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்பதனால், அக்கட்சியைச் சேர்ந்த பின்வரிசை எம்.பிக்கள், அமைச்சர் சஜித் பிரேமதாஸாவுடன் கைகோர்த்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளனர்.
ஒருவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படாவிடின்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸா நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஓர் அங்கமாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் சஜித் பிரேமதாஸாவை மிக விரைவில் சந்தித்து கலந்துரையாடுவார் என அறியமுடிகிறது.