web log free
December 07, 2023

சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்ற சிறுவன் கைது

கொழும்பு ஷங்கரில்லா ஹோட்லில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய, தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரென அறியப்பட்ட மொஹமட் சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என்றக் குற்றச்சாட்டில் 16 வயதான சிறுவனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை காரியாலயத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே, தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக செயற்பாட்ட நௌபர் மௌலவி என்பரின் மகனான மொஹமட் நௌபர் அப்துல்லா (வயது 16) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவர் பந்தியாவெவ அரக்யால கெக்குனுகொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 

அபு ஹசாம் என்ற பெயரிலேயே, நுவரெலியாவில் அவர், ஆயுதப்பயிற்சிப் பெற்றார் என விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர், சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும், மேற்படி சம்பவங்கள் தொடர்பில் 16 வயதுக்கு உட்பட்ட ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். 

ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களுக்கு அமையவே மேற்படி சிறுவன், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், இன்னும் பல சிறுவர்களுக்கு பயற்சியளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.