ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், உயர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மாறியவர்களின் வகித்த பதவிகள், பொறுப்புகள் மீளப்பெறப்பட்டு புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுதந்திரக் கட்சியின் பொருளாளராக பதவிவகித்த எஸ்.பீ.திஸாநாயக்க எம்.பி நீக்கப்பட்டு புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளன.
ஊடகப் பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார தஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஏற்கனவே வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்றிரவு (26) கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதான கட்சியின் சிரேஷ்ட உப- தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர், வேறு கட்சியில் இணைந்து கொள்வோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான யோசனையை வடமேல் மாகாண ஆளுநர் ஜேசல ஜயரத்ன முன்வைக்க, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க வழிமொழிந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரைாயடப்பட்டது எனினும், இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறிக்கவில்லை. வேட்பு மனுக்கள் கோரப்பட்டவில்லை. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பது உசித்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலமிருக்கிறது என்பதனால், முழுமையாக ஆராய்ந்து செயற்படவேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஒழுக்கத்தை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் மத்திய குழுவில் வலியுறுத்தப்பட்டது.
அது மட்டுமன்றி, எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.