இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (25.08.2019) அதிகாலை கைது செய்யப்பட்டார். தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அவர் உதவியதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதுபற்றி விசாரித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அவரை கைது செய்வதாகவும் கைது செய்ய வந்த குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது எத்தகைய அடிப்படைகளுமற்ற ஒரு குற்றச்சாட்டாகும் என்பதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மிக உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரு பதிவு செய்யப்பட்ட, நடுநிலையான சிந்தனையின் அடிப்படையில் செயல்படும் சமூக சமய இயக்கமாகும். அது சட்டபூர்வமான வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையோடு இயங்கும் ஒரு அமைப்பு என்பதுடன் எல்லாவிதமான தீவிரவாதங்களுக்கும் எதிரானதாகும்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கடந்த 24 வருடங்களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை நடுநிலைச் சிந்தனையோடு வழிநடத்திய ஒருவர் என்பதை பொதுவாக இந்த நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரும் நன்கறிவர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கோ தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடனோ அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்புகளுடனோ எத்தகைய உறவும் இல்லை என்பதை ஜமாஅத் திட்டவட்டமாக கூற விரும்புகிறது.
இந்த விசாரணைகளை மேற்கொள்கின்ற சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் நியாயம் வழங்குவார்கள் என்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுதியாக நம்புகிறது.
*ஊடகப் பிரிவு*
*இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி*
*25.08.2019*