நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை. எனினும், அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தமொன்று உள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார்.
யலி பிபிதுனு கம்உதாவ வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் உருவாக்கப்பட்ட 152 ஆவது கிராமத்தை மக்களுக்கு கையளித்துவிட்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கிராமம் ஹம்பாந்தோட்டையில் அங்குனகொலபெலஸ்ஸவில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நாட்டை அக்கூட்டமைப்புக்கு அரசாங்கம் ஒப்படைக்கபோவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் எங்களிடத்தில் இல்லை. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடத்தின் ஒரேயொரு கோரிக்கையை முன்வைத்தது என்றும் அமைச்சர் சஜித் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து, வீடுகளை கட்டிக்கொடுத்து, சுகாதார, நீர்வழங்கல், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தி தருமாறு, கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்திருந்தது.
எங்களுடைய தாய்நாட்டின் ஒருபகுதியான வடக்கு, கிழக்கை சகல துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பிழையா? என எதிரணியிடம் கேட்கின்றேன். நாட்டை முன்னேற்றுவது எங்களுடைய கடமை, ஆகையால், பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை திசைதிருப்பவேண்டாம் என, எதிரணியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.