இலங்கை அரசு கூறும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் மடிக்கணினி, யாரின் பொறுப்பின் கீழ் உள்ளது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அந்த மடிக்கணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மடிக்கணினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலேயே உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் இருந்து சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணின் கண்டெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த மடிக்கணினியில் இருந்து விசாரணைகளுக்கு தேவையான முக்கிய சாட்சியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 293 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் 115 பேரிடம் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எஞ்சியுள்ள 178 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ருவன் குணசேகர கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத சம்பவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் 41 பேருக்கு சொந்தமான சுமார் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சஹ்ரானின் மனைவியான அப்துல்லா காதர் ஃபாத்திமா, நீதிமன்றத்தில் சுமார் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள இவரிடம் இதற்கு முன்னர் 2 முறை ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.