இலங்கை அரசியல், அடுத்தவாரம் சூடுபிடித்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மிகமுக்கியமான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி., ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக, கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பதவிக்காலம் நிறைவடையும் வரையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அப்பதவியில் இருப்பதற்கு இடமளிக்குமாறும்,
பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை குறிக்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கே அந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தை பார்த்த மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதித் தேர்தலை உரிய தினத்தில் நடத்தவேண்டும் என அறிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, கல்வி நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக பரீட்சைகளுக்கும் அதுவும் தேசியப் பரீட்சையாக க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில், தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளதாக, மஹிந்த தேசிப்பிரிய அறிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் அவ்வாறான கோரிக்கைக்கு எக்காரணம் கொண்டும் செவிசாய்த்து, அமுல்படுத்த முடியாது என மஹிந்த தேசப்பிரிய அறிவித்துவிட்டார் என அறியமுடிகின்றது.