பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறை பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு பல சாதகமான நன்மைகளை பெற்றுக்கொண்டு நேற்றிரவு (19) நாடு திரும்பினார்.
ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அரசமுறை விஜயம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது. பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான 58 வருட இராஜதந்திர நட்புறவு வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு அரசமுறை சுற்றுப்பயணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த அரசமுறை சுற்றுப்பயணத்தின் விசேட அம்சமாக பிலிப்பைன்ஸ் லொஸ் பானோஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஐந்தாண்டு செயற்திட்டம் அமைந்துள்ளது. இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதில் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான தனது தலையாய கடமையாக கருதும் போதைப்பொருள் ஒழிப்பினை வெற்றிகொள்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்த சுற்றுப்பயணத்தில் பெற்றுக்கொண்ட மற்றுமொரு விசேட நன்மையாகும். அதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸில் இருந்து இலங்கைக்கு விசேட நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக பிலிப்பைன்ஸ் போதைபொருள் ஒழிப்பு பணியகத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி மனிலா நகரில் அமைந்துள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரை அந்நாட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர்.
தனது சுற்றுப்பயணத்தின் முதலாவது நிகழ்வாக பிலிப்பைன்ஸ் புரட்சியில் ஈடுபட்ட தேசிய வீரர்களை நினைவுகூரும் முகமாக மனிலா நகரின் வரலாற்று சிறிப்புமிக்க ரிஷால் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் பிலிப்பைன்ஸ் மலக்கன்யங்க் (Malacanang) ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்வினால் (Rodrigo Duterte) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை புதிய வழிகளில் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்வினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 16 ஆம் திகதி மலக்கன்யங்க் (Malacanang) ஜனாதிபதி மாளிகையில் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. இதன்போது கையினால் வரையப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படம் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டமை இரு நாட்டு அரச தலைவர்களின் நட்பின் அடையாளமாக அமைந்திருந்தது.
பிலிப்பைன்ஸ் – இலங்கை அரச தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தின் ஒருமித்த ஆதரவை வழங்குவதாக பிலிப்பைன்ஸ் பாராளுமன்ற சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது மனிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி, லொஸ் பானோஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டார். இந்த சுற்றுப் பயணத்தின் விசேட அம்சமாக சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய வளாகத்தின் ஒரு பகுதிக்கு ஜனாதிபதி மைத்துரிபால சிறிசேனவுன் பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச தலைவர் என்பதால் அவருக்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – பிலிப்பைன்ஸ் இராஜதந்திர உறவுகளுக்கு 58 ஆண்டுகள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம் நாட்டுக்கு பல நன்மைகள் பெறப்பட்ட நிலையில் நிறைவுபெற்றது.