அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவை அழைப்பதற்கான அறிவித்தல், இம்மாதம் 30ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பு மனுக்கள் கோரப்பட்ட நாளிலிருந்து 16 நாட்களுக்கும் 21 நாட்களுக்கும் இடையில், வேட்பு மனுக்கள் பொறுப்பேற்றுக்கொள்ளப்படும். அத்துடன், பிணை முதலும் பொறுப்பேற்றுக்கொள்ளப்படும்.
வேட்பு மனுவை பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து நான்கு வாரத்திலிருந்து ஆறு வாரத்துக்குள் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறிக்கப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் 14 அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த 12 அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதவிர மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக் கொண்ட போதும், வேட்புமனுவுக்குரிய காலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோள்களுக்கிணங்கவே 14 அரசியல் கட்சிகளும் தமக்கு அறிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15 ஆம் திகதி முக்கியமான அறிவித்தலொன்றை வெளியிடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.4