ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென, இதுவரையிலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் விடுக்கப்படாத நிலையில், ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 15 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பதாக, அறிவித்ததையடுத்தே, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்த போது,
சஜித் பிரேமதாஸ, புத்தளத்தில் கிறிஸ்தவ பிள்ளைகளின் மறைக்கல்விக்கான பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பங்கேற்றிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் புத்தம் மாவட்ட எம்.பியான பாலித ரங்கே பண்டார, ஹம்பாந்தோட்டை அமைச்சர் திலிப் வெதஆராச்சி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பை எடுத்துள்ளார்.
சஜித்தின் கையடக்க தொலைபேசி, அந்த நேரத்தில் சஜித்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்தது.
உடனடியாக செயற்பட்ட அந்த அதிகாரி, மேடையிலிருந்த சஜித்திடம் கொடுத்துவிட்டார்.
அப்போது, உற்சவத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை, பாலித்த ரங்கே பண்டாரவிடம் ஒப்படைத்துவிட்டு, 15 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியுடன் சஜித் பிரேமதாஸ என்ன? பேசினார் என்பது தொடர்பில் பாலித்த ரங்கே பண்டார, திலிப் வெத ஆராச்சிக்கு சஜித் பிரேமதாஸ தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.