web log free
November 27, 2024

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சஜித் உறுதி

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று காலை வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதன் போது அங்கு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒருவரின் தாயார் சஜித் பிரேமதாசவுடன் பேசுவதற்காக அவரை நெருங்க முற்பட்டிருந்தார். 

இருந்த போதும் அவருடைய பாதுகாப்பு பிரிவினர் அந்த தாயாரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதன் போது அங்கு நின்ற யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய் தான் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் ஏற்பாட்டில் அந்த தாய் அங்கு வைத்தே சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

இதன் போது அந்த தாயார் சஜித் பிரேமதாசாவை பார்த்து நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம்.

நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்.

இதனை சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார் யாழ்.மாநகர முதல்வர் 

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

Last modified on Tuesday, 10 September 2019 03:19
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd