web log free
November 27, 2024

இலங்கை அணிக்கு அச்சுறுத்தல்-பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கும் இலங்கை அணிக்கு, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கட் சபை மறுத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கை அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மீளாய்வு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாகவே இந்த அச்சுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த எச்சரிக்கையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதற்கான சாத்தியம் ஒன்று பற்றி நம்பகமான தகவல்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் தீவிர அவதானம் செலுத்தும்படியும் நிலைமை குறித்து ‘மீளாய்வு’ ஒன்றை செய்யும் படியும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை கராச்சி மற்றும் லாஹூர் நகர்களில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

Last modified on Friday, 13 September 2019 11:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd