எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களை இரத்து செய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஜே.வி.பியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் பணத்தில் அவர்களுக்கு செலவழிக்காமல், அவர்களின் பராமரிப்பு செலவுக்காக மக்கள் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக கொடுப்பனவை மட்டுமே வழங்குவேன். அதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்று(11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான ஜனாதிபதிகள் அனைவரும் பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்னர், வாழ்வதற்காக நல்ல,வசதி வாய்ப்புகளுடன் கூடிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அனுரகுமார தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஓய்வெடுப்பதற்கு முன்னரே, கொழும்பில் நல்ல வசதிகளுடன் கூடிய வீட்டை கட்டிக்கொண்டிருக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்.
மக்களின் பணத்தை வீண்விரயம் செய்யமுடியாது. செய்வதற்கும் நான் இடமளிக்கமாட்டேன். நான் ஜனாதிபதியானால், நிச்சயமாக அதனை செய்வேன் என்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் மக்கள் பணத்தை நிறுத்துவேன், மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு இடமளிக்கமாட்டேன். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தின் தேவையின் நிமிர்த்தம் மக்கள் பாதுகாப்பு நிதியத்தில் கொடுப்பனவை வழங்குவதற்கு வழிசமைப்பேன் என்றார்.