பூஸா சிறையில் வைக்கப்பட்டுள்ள விளக்கமறியலில் கைதியான சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானுக்கு கையடக்க தொலைபேசிகள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை வழங்குவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று (12) இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள், கஞ்சிப்பான இம்ரானுக்கு வழங்கிய பொதியில் இருந்து இரண்டு கையடக்க தொலை பேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரை ரத்கம பொலிஸார் கைதுசெய்தனர்.
அவர்கள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொலைபேசியை பயன்படுத்தியே, கறுவாத்தோட்ட பொலிஸாரை கஞ்சிப்பான இம்ரான் அச்சுறுத்தினார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டில், கஞ்சிப்பான இம்ரான், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.