ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் பெயரிடுமாறு கோரிக்கைவிடுத்து, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதை தொடர்ந்தும் தாமதப்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது நாட்டுக்கும் கட்சிக்கும் இழைக்கப்படும் சேதம் என்பதுடன், ஜனாநாயத்தின் மீதான தாக்குதல் என்றும் சஜித் பிரேமதாச, தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் வேட்பாளர் தெரிவில் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதில் பிரச்சினை இருந்தால், உடனடியாக கட்சியின் செயற்குழு, பாராளுமன்ற குழுவைக் கூட்டி அவர்களிடம் இரகசிய வாக்கெடுப்பை நடத்தி தீர்மானமொன்றை எடுக்குமாறும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
எந்தவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக தான் தலைமைத்துவத்தை வழங்க தயார் என்றும், ஜனாதிபதி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு தயாராக வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.