web log free
December 07, 2023

சம்பந்தனையே மடக்கிப் போட்டார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால  அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா என்பதை கூறுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா. சம்பந்தன் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.  

பிரதமை சந்திக்க முன்னர் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற  குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது. 

கடந்த தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் கருத்துக்கள் குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அது குறித்தே கலந்துரையாடப்பட்டிருந்தது. பிரதமரை சந்திக்கின்றமை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பியை தனியே சந்தித்த காரணிகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தாம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கும் எந்த நிலைப்பாட்டையும் இன்னனும் எடுக்கவில்லை என்பதையும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் வேட்பாளர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். 

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் நீண்டகால தமிழர் பிரச்சினைகளுக்கு செவி மடுக்கக்கூடிய அதேபோல் வாக்குறுதிகளை வழங்கக்கூடிய வேட்பாளரை ஆதரிக்க முடியும். அதேபோல் எமது மக்களின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டும் தீர்மானம் எடுக்க முடியும் என்பதை ஆர்.சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினரிடம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பிற்பகலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பாராளுமன்றத்தில் பிரதமர் காரியாலயதில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமோகன் எம்.பி தவிர்ந்து ஏனையே சகல உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் பிரதமருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன மாத்திரம் கலந்துகொண்டார். 

இதில் எந்தவொரு கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரிக்க இன்னமும் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை, நாம் முதலில் உங்களின் வேட்பாளர் யார் என்பதையே பார்க்கிறோம் முதலில் பிரதான கட்சிகள் அனைத்துமே தமிழ் மக்களின் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள் என்பது கூறுவது பார்த்தே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என கூட்டமைப்பின் தலைமைகள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர். 

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை கூறுங்கள் எனவும் வினவியுள்ளனர். இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் தான் எந்த சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை நோக்கியே பயணிக்க விரும்புகின்றேன். நிச்சயமாக வாக்குறுதிகளை காப்பாற்றுவேன் என்பதை எடுத்துரைத்துள்ளார். 

அதுமட்டுமன்றி கல்முனை விவகாரத்துக்கு முதலில் தீர்வை காண்பேன் என ரணில் உறுதியளித்துள்ளார்.

அதற்குப் பின்னர், புதிய அரசியலமைப்பை நிறைவுச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Last modified on Wednesday, 18 September 2019 18:28