ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளமையால். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை அறிவிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கு, சஜித் அணியினர் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று, இன்று (19) காலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அதன் பின்னர், உடனடியாக ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுமாறு கோரி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்துவதற்கும் அந்தத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
அந்தக் கோரிக்கைக்கு முறையான பதில் கிடைக்காவிடின், வாரத்தின் இறுதியில் கட்சியின் ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து, அலரிமாளிகையை சுற்றிவளைத்து, ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுச் சிறையில் வைப்பதற்கும் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், அடுத்தவாரம் அறிவிப்பு விடுக்கப்படும் என கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்திருந்தார்.
அடுத்தவாரம், 29ஆம் திகதி ஆரம்பிக்கிறது.
அதாவது, ஜனாதிபதி வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு, எட்டுத்தினங்கள் இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.