web log free
December 05, 2023

இப்படியும் செய்த மொஹமட் யூசுப் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றவர்களில் மூவரை விடுவித்து தருவதாகக் கூறி, உறவினர்களிடமே பணம் வசூலித்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், தன்னுடைய உறவினர்களிடமிருந்து 10 இலட்சத்து 11ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறிப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரியான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவர் ஆவார். 

கொடிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப் மொஹமட் ஸ்மின் (வயது 48) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரையும் மற்றும் பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ள இருவரையுமே தான் விடுவித்து தருவதாகக் கூறி, அந்த நபர் பணத்தை வசூலித்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

 

 

குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.