விசேட அமைச்சரவைக் கூட்டம் யாரால் கூட்டப்பட்டது. யார், யார் தொலைபேசி அழைப்புகளை விடுத்தனர் என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதியன்று காலையில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். அவருடன் உரையாடிய நான், விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஒத்துக்கொண்டேன்.
அதன்பின்னர், எனது செயலாளருக்கு அமைச்சரவையின் செயலாளர் அறிவித்தார்.
இவற்றுக்கெல்லாம் முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் சிவில் சமூகத்தினர் என்னிடம் கையளித்த ஆவணத்தை, விசேட அமைச்சரவையில் கையளிக்கலாம் என ஆலோசனை வழங்கினேன்.
அதற்கு முன்னர், அமைச்சர்கள் அலரிமாளிகையில் சந்தித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடலின் சாராம்சத்தை எடுத்துரைத்தேன். அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த எதிர்ப்பு தொடர்பிலும் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.
அன்றையதினம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, எனக்கு தொலைபேசி அழைப்பை எடுக்கவே இல்லை.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு எனக்கும் இருக்கின்றது என்பதனால், அதனை நானும் கடைப்பிடிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும்படி இந்த பிரதிநிதிகள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த சிவில் சமூக பிரதிநிதிகள் தம்மிடம் இதுவிடயம் குறித்த பிரேரணை ஒன்றை கையளித்தனர் ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி 20ஆவது திருத்தம் சாத்தியப்படாது என்று பிரதமர் இதன் போது தெரிவித்தாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். எனவே ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து அதுபற்றி தம்மிடம் அறிவிக்கும்படி சிவில் சமூக பிரதிநிதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். நிறைவேற்று முறையை ஒழிப்பது குறித்து ஜே.வி.பி உடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 17ம் திகதி என்னிடம் கூறினார்.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதெனில், பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்திருந்தார்..
அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை. 19ம் திகதி காலை 8.16 மணிக்கு ஜனாதிபதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
20ஆது திருத்தம் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை அழைக்கலாமா என்று அவர் என்னிடம் கேட்டார்.
இதற்காக சிவில் சமூகம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளதாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்தும் சுமந்திரன் எனக்குத் தெரிவித்திருந்தார்.
எனவே, அமைச்சரவையை அழைத்து விவாதிப்பது பொருத்தமானது என்று ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன் என பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.