web log free
November 27, 2024

‘நான் உணர்ச்சி வசப்பட்டால் சாந்தப்படுத்துவார் ரணில்’

நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரத்துக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவாரென நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

அத்துடன், அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் நடப்பது சகஜமானது என்பது, பிரதமருக்கு  நன்றாகவே தெரியுமென்றும் அவர் கூறினார்.

 தான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதெல்லாம் தங்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தக்கவைத்து முரண்பாடுகளை கலைவதற்காகவே என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், தான் உணர்ச்சிவசப்படும்போதெல்லாம் பிரதமர் தனக்கு ஆறுதல்கூறி அமைதிப்படுத்தியிருந்ததாகவும் நினைவுப்படுத்தினார்.

இவ்வாறான ஒரு நிலையில், தனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர் என்றும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார். 

கண்டி வடக்கு மற்றும் பாததும்பர பிரதேசத்துக்கான நீர்வழங்கல் திட்டத்த்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தோரகமுவையில் சனிக்கிழமை (21) நடைபெற்றது.

பிரதமர் ரணில்விக்ரமசிங்க பிரதம அதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்குறிப்பிட்ட விடயங்களை தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவிக்கையில்,  “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசம்  ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர். அரசியல் ஞானி. ஐக்கிய தேசியக் கட்சியை  ஆட்சியில் அமர்த்தும் நீண்ட பயணத்தில் நாங்கள் பல தியாகங்களை செய்துள்ளோம். அதில் குறிப்பிடத்தக்க விடயம் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இந்த பாததும்பர தொகுதியில் 10 உயிர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். இவையெல்லாம் பிரதமருக்கு தெரியாத விடயங்களல்ல.” என்றார்.

ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 320 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த 117 500 குடும்பகளுக்கான தூய குடிநீரை வழங்க முடியும். இதன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் பேர் பயனடையவுள்ளனர். இலங்கை அரசாங்கம் மற்றும் சீன எக்சிம் வங்கியினதும் நிதிப்பங்களிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd