பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த, கடந்த 19ஆம் திகதியன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் பல்வேறான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன.
விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர் யார்?, கூட்டத்தை கூட்ட சொன்னது யார்?, எவ்வாறான ஆவணங்கள் அன்று சமர்ப்பிக்கப்பட்டன. அதனை சமர்ப்பித்தவர் யார் உள்ளிட்ட விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை.
“ரணில் விக்கிரமசிங்க, ஆடைகளை உடுத்திக் கொண்டுதான் பேசுகின்றாரா” என மாத்தளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டார்.
கட்சியின் செயற்பாட்டாளர்களை, அலரிமாளிகையில் ஞாயிறுக்கிழமை (22) சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, என்ன நடந்தது, ஏது நடந்தது, யார் நடத்தினர், எவ்வாறான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விடயங்கள் அடுக்கிக்கொண்டே போனார். எனினும், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு முயற்சியின் பிரகாரம், சிலவிடயங்களை தெரிவிக்கமுடியாது என, சப்பென முடித்துவிட்டார் ரணில்.
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னைக் கடந்தவாரம் 16 ஆம் திகதியன்று சந்தித்து, பல்வேறு விடயங்களை தெரிவித்தனர்.
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்தால் அதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு, அமைச்சரவைத் தீர்மானமொன்றை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கான, ஆவணத்தையும் என்னிடம் கையளித்தனர்.
ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பின்றி, பிரேரணையை நிறைவேற்ற முடியாது. ஆகையால், ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, எனக்கு அறிவிக்குமாறு, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தேன் என்றார் பிரதமர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கடந்த 17ஆம் திகதியன்று என்னைச் சந்தித்த, சுமந்திரன் எம்.பி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு, ஜே.வி.பியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார்.
அதேபோல, 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு தனக்கும் தேவையொன்று இருப்பதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளார் என்றும் சுமந்திரன் எம்.பி, என்னிடம் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பும் இன்றி, 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என சுமந்திரனிடம் நான் எடுத்துரைத்திருந்தேன்.
அதுதொடர்பில், சுமந்திரனும் கருத்துரைத்திருந்தார். 19ஆம் திகதி காலை 8.10க்கு ஜனாதிபதியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடவேண்டும். அதற்காக அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடவாவென கேட்டார்.
நல்லதென கூறிய நான், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தன்னிடம் இதற்கான கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
ஆகையால், வியாழக்கிழமையோ, வௌ்ளிக்கிழமையோ இந்தக் கூட்டத்தைக் கூட்டுவது இலகுவானது என நான் ஜனாதிபதிக்கு கூறியிருந்தேன். “அன்றையதினம், ரவி கருணாநாயக்க அமைச்சர், எனக்கு எவ்விதமான அழைப்பையும் எடுக்கவில்லை” அமைச்சரவையின் செயலாளர், என்னுடைய செயலாளருக்கு அன்றுகாலை 9 மணியிருக்கு அழைப்பை எடுத்து, அன்றைய தினம் மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர். சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட யோசனை, என்னுடைய செயலாளர் அமைச்சரவையின் செயலாளருக்குக் கையளித்து, தேவையேற்படின் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களை அன்றுமாலை 2 மணிக்கு நான் அழைத்தேன்.
இதுதொடர்பில் நான் அறிவுறுத்தினேன். அந்தக் கலந்துரையாடல் மிகவும் சூடுபிடித்திருந்தது. சகலரும் வெளிப்படையாகவே தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். 20ஆவது திருத்தத்துக்காக அங்கு அனுமதி கிடைக்கவில்லை.
விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஜனாதிபதிக்கு அழைப்பை எடுத்து, அமைச்சர்கள் எதிர்க்கின்றனர்.
20 ஆவது திருத்தத்தை கொண்டவருவதற்கு இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்தேன்.
விசேட அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லையென அறிவுறுத்தினேன் அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பில் ஏதாவது கருத்துரைக்க வேண்டுமாயின், அவற்றை அமைச்சரவைக்குள்ளே பேசித் தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் விடுவது அமைச்சரவைக் கூட்டுபொறுப்பை மீறுவதாகும். ஆகையால், அந்த விடயங்களை மட்டுமே நான் இவ்விடத்தில் கூறுகின்றேன் என்றார்.