தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தின் வளாகத்தில் நிர்வாணமாக போராட்டமொன்றை நடத்திவருகின்றார்.
இது இலங்கையில் அல்ல, இந்தியாவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாமி.
இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு காவல் நிலையத்திற்குள் சென்று தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்தவர்களைப் பற்றி புகார் தெரிவித்ததால் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உயிருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். அந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ அப்போது வாட்ஸ் அப்பில் பரவி பார்ப்பவர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில், வழக்கறிஞர் சாமி டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும் நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
போராட்டத்தின்போது அவர் வைத்திருந்த மனுவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32ன் படி தனக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை ரிட் மனுவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் சாமி தனது மனுவில், “தற்போது நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். அதே நேரத்தில் பள்ளிக் காலம் முதல் இன்று வரை 20 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறேன்.
நான் ஒரு சமூக ஆர்வலராக இருக்கிறேன். அதற்கான சான்றுகளையும் அளித்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர் பணி மற்றும் சமூக சேவை காரணமாக 6 வகையான அடியாட்கள் குழுக்கள், ரௌடிகள், என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கொல்லப்படலாம். அதனால், தனக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். வழக்கறிஞர் சாமியின் இந்த திடீர் நிர்வாணப் போராட்டத்தால் உச்ச நீதிமன்ற வளாகம் பரபரப்புக்குள்ளானது.