web log free
November 27, 2024

சர்ச்சைக்குரிய டிக்கிரி யானை இறந்தது

இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த டிக்கிரி என்ற பெண் யானை (வயது 79) இறந்துள்ளது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை செவ்வாய்க்கிழமை இறந்துள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடக்கும் பெரஹரா என்ற பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமான உற்சவமாக கருதப்படுகிறது.

அதில், வயது முதிர்ந்த இந்த யானை பங்கேற்றிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருந்தது. 

 

கண்டி பெரஹராவை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டது.

மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தைத் தலமாகக் கொண்டு இயங்கும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த மாதம் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகள், தீப்பந்தங்கள் மற்றும் புகை ஆகியவற்றுடன் இந்த யானை பல கிலோமீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிரமமான ஒன்று என தாய்லாந்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த யானையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நாள் முதல், இந்த யானை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

வயதான நிலையில், சுகவீனமுற்ற இந்த யானை தொடர்பில் கவனம் செலுத்தி, அதனை எதிர்வரும் உற்சவங்களில் பங்கேற்பதை நிறுத்துமாறும் விலங்குரிமை செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானை சுகவீனமுற்றதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணுவுக்கு நேர்த்திக் கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நேர்த்தி கடனை செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த யானை உற்சவத்தில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

டிக்கிரி யானை சுமார் 2 கிலோமீட்டர் வரை பயணிக்க எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என வைத்தியர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த யானை உற்சவத்தில் கலந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்த யானை, நேற்றுமாலை இறந்துவிட்டது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd