தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரானுடன் நேரடியாக தொடர்புகளை வைத்திருந்தவர்கள், ஆயுதப் பயிற்சிகளை பெற்றிருந்தோர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை விதைத்தோர் என அறியப்பட்ட அவ்வமைப்பைச் சேர்ந்த 14 முக்கிய உறுப்பினர்களிடம் விசேட விசாரணைப் பிரிவு தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதவானின் கவனத்துக்கே, மேற்படி விசாரணைப்பிரிவு மேலே குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையொன்றை கையளித்தது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ மற்றும் அதன் விசாரணைப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள முக்கிய சந்தேகநபர்கள் 14 பேர் தொடர்பிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 14 முக்கிய சந்தேகநபர்களும், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரென அறியப்பட்ட மொஹமட் சஹ்ரான், நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுத்த கூட்டங்களில் பங்குப்பற்றியதுடன், ஆயுதப்பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். சஹ்ரானினால் நடத்தப்பட்ட சகல கூட்டங்களிலும் இந்த 14 பேரும் பங்கேற்றுள்ளனர் என அறியமுடிகின்றது.