தாமரை சின்னத்தை கைவிட்டு பொது சின்னமொன்றில் களமிறங்குவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஊசலாடி வருகின்றது.
இதற்கிடையில், ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் பங்குப்பற்றினர்
ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுச் சின்னத்துக்கு பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிக்கவில்லை என நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
எனினும், ஐக்கிய தேசிய முன்னணி, யானை சின்னத்தை கைவிட்டுவிட்டு, அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கே தீர்மானித்துள்ளது என சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார்.