ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விதித்திருந்த 332 அம்ச கோரிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் நிராகரித்து விட்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 32 அம்ச கோரிக்கையை, ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்து விட்டது. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸவும் நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில், தாமரை மொட்டுவின் சார்பில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை களமிறக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.
முத்தையா முரளிதரன், நுவரெலியா மாவட்டத்திலேயே தன்னுடைய தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
இதுதொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களையும் முத்தையா முரளிதரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்ற முக்கிய வைபவமொன்று, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது.
அதில், முத்தையா முரளிதரன் பங்கேற்று, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.