web log free
November 28, 2024

பின்வாங்கினார் கஜேந்திரகுமார்- 5 கட்சிகள்மட்டுமே ஒப்பம்

தமிழ்க் தேசியக் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஆவணத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திடவில்லை.

ஏனைய ஐந்து கட்சிகள் மட்டுமே கைச்சாத்திட்டன. இந்த ஏற்பாட்டை யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 

இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் எமது நிலைப்பாட்டுக்கு அமைவாக,

நடந்து முடிந்த யுத்தத்தின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியான தீ;ர்வை சாத்தியமான வழிகளில் காண முடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்கு கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.

கோரிக்கைகள்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஃ சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரசபடைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகாரசபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு; மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடக்கு – கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தை சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செயயப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

Last modified on Tuesday, 15 October 2019 01:55
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd