web log free
November 28, 2024

நீராவடி விஹாரைக்கு கெமரா பொருத்த தடை

முல்லைத்தீவு நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்த நிலையில் விகாரைகளில் இவ்வாறு கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சி.சி.டி.வி கெமராக்களை பொருத்த வெலி ஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஹாராதிபதி பணியின் நிமித்தம் வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் வரும் வரை விகாரையின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சி.சி.ரி.வி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த போது பொலிஸார் வருகைதந்து பணிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக தற்காலிக பாதுகாவலர் கூறியுள்ளாரர்.

அதன் பின்னர் அவர்கள் பொருத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் அங்கிருந்து அகற்றியதாக குறித்த பாதுகாவலர் அததெரண செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விகாரையின் தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார, எமது விகாரையில் கோயில் ஒன்று உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து அச்சுறுத்தி வருகின்றனர்.

அதன் பின்னணியிலேயே விகாரையில் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்த விஹாராதிபதி நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் தற்போது அதற்கு பொலிஸார் தடை விதிக்கின்றனர். இந்த நிலையில் விகாரையின் நிர்வாக குழுவும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளது.

இதற்கு முன்னரும் விகாரை பூமியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் கோயிலை வழிப்பட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் டி.ரவிகரன் உள்ளிட்ட பலர் வருகைதந்து விகாராதிபதியை அச்சுறுத்தி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் வினவியதற்கு குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் கோவிலை அமைப்பதை தடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெறுவதாகவும் அதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களை அகற்றியதாகவும் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 16 October 2019 02:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd