நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா எக்காரணத்திற்காகவும் ஜனாதிபதிவேட்பாளராகப் டியிடுவதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடித்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக போட்டியிலிருந்து விலகுமாறு அநுர குமார திசாநாயக்காவிடம்ன் ஐக்கிய தேசிய முனணி தரப்பினர் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர குமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகுவதற்கோ, அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக சஜித் பிரேமதாசாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு மக்களிடம் கோருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் எதனையும் பேசுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இல்லை என்றும் விஜித ஹேரத் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்குமிடையில் எந்தவித மாற்றங்களையும் காண முடியவில்லை என்றும், எவராவது கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக அநுர குமார திசாநாயக்கா போட்டியிலிருந்து விலக வேண்டும் என எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு கூற வேண்டியிருப்பது கோத்தாபயவை தோற்கடிக்க வேண்டுமாயின் சஜித் பிரேமதாசா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்றேயாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களிடத்தில் தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும், தமது கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் என்றும், மொட்டு கட்சிக்கு 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது என்பது அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கா கூறியுள்ளார்.