அரசியலமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .
அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும்.
தமிழ் மொழி முழு இலங்கையின் இன்னொரு ஆட்சி மொழி என்பதையும், தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதையும் இந்த தமிழில் பேசும் மூன்று கோட்டா ஆதரவு கூட்டு குடித்தன அரசியல்வாதிகளும் அறிவார்கள் என நம்புகிறேன்.
எங்களுக்கும் இது தெரியாதே என என் நம்பிக்கையில் மண்ணை போட்டு விடாதீர்களப்பா என இவர்களை வேண்டுகிறேன் எ்ன்றும் தெரிவித்துள்ளார்.
வத்தளையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்ட உரையாற்றிய அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையின் இன்றைய அரசியலமைப்பின்படி, இலங்கையின் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆகும். இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். சட்டப்படி சமமான ஆட்சி - தேசிய மொழிகள் என்பதற்காக, பெயர்பலகைகளில், ஒன்றின் மீது ஒன்றை எழுத முடியாது. ஆகவே வரிசையாக எழுத வேண்டும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த, ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்றும் எழுத வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பிரதேச செயலக பிரிவில் அந்த மாகாணத்தில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியை தவிர்ந்த அடுத்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்ந்தால், இந்த வரிசை மாறலாம். ஆனால் ஆங்கிலம் எப்போதும் மூன்றாம் இடத்திலேயே எழுதப்பட வேண்டும்.
இலங்கை அரசியலமைப்பில் மொழி தொடர்பான 4ம் அத்தியாயத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக மொழிகள்: 22. (1) இலங்கை முழுவதிலும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்த்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம், இலங்கையின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அரச பொது பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுவதற்காகவும், சிங்கள மொழி பயன்படுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்.
14/நவம்பர்/1987 அன்று 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகளாக அதிகாரப்பகிர்வு வந்தது. 17/டிசம்பர்/1988 (என் பிறந்த நாள்!!) அன்று 16ம் திருத்தம் மூலம் இந்நாட்டில் தமிழும் ஆட்சி மொழி ஆகியது. இவை இரண்டும் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட புலிகளின் போராட்டமே மூல காரணம். துணை காரணம் இந்திய அரசு. இந்த இரண்டு அழுத்தங்கள் காரணமாக இவை நிகழ்ந்தன. பிறகு புலிகளும் இந்திய அரசும் தமக்குள் சண்டையிட்டு நாசமாக போனது பின்கதை.
இன்று, இந்த இரண்டு திருத்தங்களையும் காப்பாற்றி முன்-நகர்த்த எம்மால் முடியும். அதை நோக்கியே நான் சிந்திக்கிறேன். பேசுகிறேன். செயற்படுகிறேன். பயணிக்கிறேன். இந்த தெளிவு எனக்கு இருக்கிறது. இது நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். முக்கியமாக தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.