சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையானது தற்போது சில அரசியல்வாதிகளுக்குப் பெரும் பிரச்சினையாகி உள்ளது என்றும், அதன் ஊடாக பெரும் சேற்றுக் குட்டையை உருவாக்கி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது தொடர்பில் பிரச்சினையைக் கிழப்பும் ராஜபக்ஷக்களுக்கு ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது மறந்து போயுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான மிகவும் கீழ்த்தரமான முறைகளில் கூட இனவாதத்தைத் தூண்டும் அரசியல்வாதிகளினால் தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய ஒற்றுமையினை எதிர்பார்க்க முடியுமா என அநுர குமார திசாநாயக்கா கேள்வி எழுப்பினார்.
தற்போது நாட்டில் எல்.டி.டி.ஈ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் இல்லை என்றும், இருப்பது இனங்களுக்கிடையில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக தோன்றியுள்ள பாதுகாப்பற்ற நிலை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனடிப்படையில் அந்த பாதுகாப்பற்ற நிலையினை இல்லாமலாக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரே வேலை இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதே என்றும் ஜே.வி.பியின் தலைர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.