web log free
November 28, 2024

“பலாலி ஒடுபாதையில் சைக்கிள் ஓட்டிப்பழகினேன்”

இலங்கையில் 41 வருடங்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்றையச் சூழலில் தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள உறவினைப் மேலும் பலப்படுத்துமா?

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய படைகளால் முதல் முறையாக யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையம் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்டது.

1947ம் ஆண்டு முதல் முறையாக பலாலியில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1978ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கான விமான பயணம் தடைப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கான விமானசேவையினை ஆரம்பிக்குமாறு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய 2016ம் ஆண்டு சென்னை விமான நிலைய பணிப்பாளர் தீபக்சாஸ்திரி தலைமையில் ஒரு குழு யாழ்ப்பாணம் பலாலிக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ததுடன், தற்பொழுது பலாலி விமான நிலையம் அமைந்துள்ள நிலப்பரப்பை கொண்டே இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க முடியும் என தெரிவித்திருந்தனர்.

அதன் பின்னர் படிப்படியாக பேசி இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் யாழ்ப்பாணம் - இந்தியா விமான சேவைக்கான விமான நிலைய நிர்மான பணிகளை ஆரம்பித்தனர்.

விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் 1950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்து பிரதான ஓடு பாதை 950 மீட்டர் அளவில் புதிதாக அமைக்கப்பட்டு விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்த மக்கள் தமது அனுபவத்தையும் தற்போதைய மனநிலையையும் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.

"யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த பலாலி விமான நிலையம் எனது தந்தையார் காலத்தில் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனை சேர்ந்தவர்களால் அமைக்கப்பட்டது.
Image captionவலி வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம்

எனது தந்தையார் விமான நிலைய ஓடுபாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டார்." என கூறும் வலி வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் பிரிட்டனை சேர்ந்தவர்கள் யுத்தத்திற்காக விமானங்களை பயன்படுத்தியதை தான் அறிந்திருந்ததாகவும் கூறுகிறார்.

"1957 அல்லது 1958 இல் நானும் எனது தந்தையாரும் எயார் சிலோன் டாகோட்டா விமானத்தில் இந்த விமான நிலையம் ஊடாக திருச்சிக்கு சென்றோம், அப்போது பயணச்சீட்டு 40 ரூபாய் ஆகவும் கொழும்புக்கான பயணச்சீட்டு 45 ரூபாயாகவும் இருந்தது." என்கிறார் குணபாலசிங்கம்.

பலாலி விமான நிலையத்தின் ஒடுபாதையில் தான் சைக்கிள் ஓட்டிப்பழகிய அந்த பசுமை நினைவுகளையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்தகாலத்தில் விமான நிலையம் என்ற கெடுபிடிகள் இன்றி அச்சமின்றி இயங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

காலப்போக்கில் அவ்றோ விமானம் இங்கு வந்தது. அது கொழும்புக்கு 40 நிமிடத்தில் சென்றுவிடும். இப்போது உள்ள கட்டுநாயக்கா விமான நிலையம் அப்போது இல்லை இரத்மலானை விமான நிலையம்தான் இருந்தது என்கிறார் குணபாலசிங்கம்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd