web log free
November 28, 2024

உயிர்த்த ஞாயிறு அறிக்கை- அரசியல்வாதிகள்  இலக்கல்ல

 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றதைப் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ளதாக, விசேட பாராளுமன்றக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

சுமார் 200 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகளில் எந்தவித உண்மையும் இல்லையென்றும் அவர் கூறினார்.

 இந்த அறிக்கை தொடர்பில் வெளியான சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்த அவர் , எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது. நீதிமன்றத்துக்கே இதற்கான அதிகாரம் உள்ளது. எங்கு குறைபாடுகள்

இடம்பெற்றுள்ளன எவ்விடத்தில் பலவீனம் காணப்படுகின்றது என்பதையே பாராளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்தது என்றார்.

கிழக்கு மாகாணத்தில் இதற்கான சூழல் உருவாகியது எவ்வாறு, இது எப்படி மேலிடத்துக்கு அறிக்கையிடப்படவில்லை, பாதுகாப்புத் தரப்புக்களுக்கிடையில் தொடர்பாடல்கள் இடம்பெறாமை, புலனாய்வு சேவைகளினால் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாமை போன்ற விடயங்களே விசேட பாராளுமன்றக் குழுவினால் ஆராயப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார். இதனூடாக கண்டறியப்பட்ட குறைபாடுகள் மாத்திரமன்றி, எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தீர்மானத்திற்கு அமைய உயிர்த்த ஞாயிறு குறித்து ஆராய விசேட பாராளுமன்ற குழு நியமிக்கப்பட்டது.இக்குழு சுமார் 3 மாத காலம் வரை கூடி தாக்குதல் தொடர்பில் சாட்சி விசாரணை மேற்கொண்டதோடு இக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இன்னாள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள்,பாதுகாப்பு உயரதிகாரிகள் உட்பட பலரும் சாட்சியமளித்தார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd