web log free
November 28, 2024

முருகனுக்கு சித்திரவதை- நளினி உண்ணாவிரதம்

தமிழகத்தின் வேலூர் சிறையில் தனி அறையில் அடைத்து முருகனை சித்ரவதை செய்வதாகவும் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நளினி உண்ணாவிரதம் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறை நிர்வாகம் தம்மை கொடுமைப்படுத்துவதாக முதல்வருக்கு முருகன் மனு அளித்துள்ளதாக நேரில் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்ட் செல்போன், சிம்கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டு இருந்த அனைத்து சலுகைகளையும் 3 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளதுடன், அவரை தனிச்சிறையிலும் அடைத்துள்ளனர்.

அதன்படியே நேற்று நடக்க இருந்த முருகன், நளினி சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி நேற்று முன்தினம் சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு மனு அளித்துள்ளார்.

அதில், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி நேற்று காலை கொடுக்கப்பட்ட பால் மற்றும் உணவை நளினி ஏற்க மறுத்து உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார்.

அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் சிறைகளில் உள்ள முருகன், நளினி இருவரையும் சந்தித்து பேசியுள்ளார்.

முருகன் கடந்த 7 நாட்களாக சிறையில் கொடுக்கும் உணவை எடுத்து கொள்ளாமல், பழம், பால் மட்டும் சாப்பிட்டு வருகிறார்.

செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு சிறை நிர்வாகம் முருகனை தனி சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், 4 நாட்களாக குளிக்கக்கூட அனுமதி அளிக்கவில்லை என்றும் சிறை நிர்வாகம் நடத்தும் கொடுமை குறித்து முருகன், முதல்வருக்கு மனு எழுதி உள்ளார்.

சித்ரவதைக்குள்ளான முருகனின் உயிரை காப்பாற்ற வலியுறுத்தியே நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd