தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என யார் அழுத்தங்களை வழங்கினாலும் நாட்டின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். அச்சிறுவனை பத்திரமாய் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பத்திரமாய் மீட்கவேண்டுமென நாமும் பிரார்த்திப்போம் என்றும் சஜித் இதன்போது வேண்டிக்கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிவித்திகல பிரதேச சபை உறுப்பினர் திலிப் ராஜபக்ஷ, கஹவத்தை பிரதேச சபை வேட்பாளர் திருமதி வீரகோன், ஸ்ரீ.ல.சு.கட்சியின் இரத்தினபுரி மாவட்ட ஊடக இணைப்புச் செயலளார் தனூஜ் கமகே உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைவழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,
“சஜித் வந்தாலும், கோட்டா வந்தாலும் தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என வெளிநாடு ஒன்று தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றது.
அவ்வாறு குற்றம் சுமத்தும் நாட்டின் குடியுரிமை உள்ளவரிடத்தில் அந்த அழுத்தத்தைத் தெரிவிக்க முடியும். தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது. இரு பக்கத்திலும் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை எனக்கில்லை.