நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நவம்பர் முதல் வாரத்தில் இந்த அறிவிப்பை அவர் விடுப்பார் எனவும் மேற்படி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவுக்காக டோக்கியோவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பினார்.
இந்நிலையில், நாளை முதல் முக்கிய சில சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார்.
அதன்பின்னரே அறிவிப்பு வெளியாகும். அதேவேளை, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர், சஜித் ஆதரவு அணி முக்கியஸ்தர்கள் சிலர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சந்திரிக்கா தலைமையிலான அணியொன்று சஜித்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காகவே சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை வகிக்கபோவதாக ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார். சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளர் ஒருவரையும் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.