தங்களை இனியும் ஏமாற்ற முடிந்தால் இதுதான் பதில் சொல்லும் என்பதை சொல்வதைப்போல, வவுனியாலில் பெண்ணொருவர் தன்னுடைய கையில் செருப்பை எடுத்து, எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பயணிக்கும் வாகனத்துக்காக அப்பெண் காத்திருந்துள்ளார். எனினும், பொலிஸார் தலையிட்டமையால், அப்பெண் உள்ளிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
வவுனியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், கூட்டமைப்புக்குள் ஒரு சில குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
உண்மையில், பாதிக்கப்பட்ட பெண்தான் அவ்வாறு செய்தாரா அல்லது வாடகைக்கு அமர்த்தி அவ்வாறு செய்விக்கப்பட்டாரா என்பது தொடர்பில் சர்ச்சையொன்றும் நிலவுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த 3ஆம் திகதியன்று வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடலும் வவுனியாவில் இடம்பெற்றது.
அதில், பங்கேற்பதற்கு, வருகைதரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு தங்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் வகையிலேயே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.