எதிர்வரும் 16ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (5) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சகலரும் பங்கேற்பர் என்றும் அறியமுடிகின்றது.
அடுத்தவாரம் 12ஆம் திகதி விடுமுறை தினம் என்பதனால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இருக்குமென அறியமுடிகின்றது.
இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் மிலேனியம் செலன்ஞ் கோப்ரேஷன் ஒப்பந்தத்தை மீண்டும் சமர்ப்பித்து, அதனை மீளவும் ஆராய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளிக்கவில்லை. என்றாலும், அமைச்சரவையின் அனுமதி கடந்த வாரம் கிடைத்துள்ளது. ஜன
இந்த மிலேனியம் செலன்ஞ் கோப்ரேசன் ஒப்பந்தம் தொடர்பில், பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்தவாரம் எட்டப்பட்ட தீர்மானம் தொடர்பில் இவ்வாராம் ஆராயப்படும் என அறியமுடிகின்றது.
இந்த ஒப்பந்தத்துக்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்தால், அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதற்கு, அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.