யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பயன்படுத்தினார் என சந்தேகிக்கப்படும் வீட்டில், ஆயுதக்களஞ்சியசாலை இருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அந்த வீட்டை, இன்று (25) சோதனைக்கு உட்படுத்தினார்.
யுத்தத்துக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டு, மீள் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பில், கோபி, அப்பன் மற்றும் தெய்வீகன் ஆகிய புலித்தலைவர்கள் முன்னெடுத்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கான திட்டங்கள் யாவும், இந்த வீட்டில் வைத்தே தீட்டப்பட்டதாக அறியமுடிந்தது.
அதனையடுத்து, அந்த வீடு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த மூன்று பயங்கரவாதிகளும், படையினரில் தாக்குதல்களில் பலியாகினர்.
இந்நிலையில், அந்த வீட்டின் நிலகீழ் அறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், அந்த வீட்டு,நேற்றும் இன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட அகழ்வில் எவ்விதமான தடயங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.